வீரம்போ ரிடல்மட்டு மன்று உயிர்க்குருதி
யீதலும் பெருவீர மாம்.
121
வீரம்போ ரிடல்மட்டு மன்று உயிர்க்குருதி
யீதலும் பெருவீர மாம்.
121
நல்லாரைப் போற்றும் உலகமோ நல்லாரின்
புல்லாரைத் தூற்றுஞ் சூழ்ந்து.
122
புல்லார் - எதிரி
புல்லார் ஒருவரும் வேண்டிலை அன்பு
இல்லார் அழிந்தொ ழிய.
123
பெர்னௌலி தேற்றம்
சீரென ஓடிடும் பாய்மத்தெப் புள்ளியின்
ஆற்றலின் கூட்டலொன் றே.
124
மாசாக்கும் நீர்நிலம் காற்றை நிறுவனம்
காசாக்கும் கேளா தரசு.
125
பூவிதழ் காணும் தேனீக்கள் அதைத்தாங்கும்
புல்லிதழ் காண்பதில் லை.
126
புல்லிதழ் - பூவின் இதழ்களைத் தழுவித் தாங்கி நிற்கும் காம்பின் இதழ் வட்டம், Sepal, Calyx
தூய்மை யெனக்கூ வுவார்துப் புரவுப்
பணியா ளரைமதி யார்.
127
மலரோ ஒருநாள் உதிர்ந்திடும் புல்லிதழ்
உதிராது தாங்கும் கனி.
128
வில்விழி யாலவள் வீசும் கணைகளோ
புல்லுதே யுள்ளப்பூ வை.
129
புலரும் பொழுதிங்கு நற்பொழுதே புத்தம்
புதிதா யுணர்வாய் மனத்து.
130
உண்மை நவின்றிட போமெதற்கு உள்ளத்து
திண்மை வளர்த்திட போம்.
131
போம் - அச்சம், போகும், போய் விடும்...
அறிவாள னென்பார் தரவுகேட் பின்புல்
லறிவாள னாய்க்குரைப் பார்.
132
புல்லறிவாளன் - கீழ்த்தரமான அறிவுடையவன், அறிவிலி
விழுமுக மூடிகள் கற்றுத் தருமே
விழுமியப் பாடம் பல.
133
மிடுக்குத் தமிழ்ச்சொல் லிருக்க ஒட்டிக்
கெடுக்கும் வடமொழியெ தற்கு?
134
கதிரின் ஒளியில் புலர்த்திய மத்திக்
கருவாடு என்றும் அமிழ்து.
135
கெப்ளரின் முதல் கோளியக்க விதி:
கோள்சுற்றுப் பாதைநீள் வட்டம் அதன்குவி
யங்களி லொன்றுக் கதிர்.
136
கெப்ளரின் இரண்டாம் கோளியக்க விதி:
சமநேரத் தேகோள் கதிரிணைக்குங் கோடு
விரவும் பரப்பு சமம்.
137
கெப்ளரின் மூன்றாம் கோளியக்க விதி:
சுற்றுக்கா லத்தின் இருபடிநேர் சார்பாம்
அரைப்பேரச் சின்முப் படிக்கு.
138
உளத்தே நகைத்துப் புறத்தேச் சினக்கும்
புலவி உறவின் நகை.
139
மெல்லென் றுதிக்கும் கதிரோன் வரும்வரை
புல்லில் உறங்கும் பனி.
140
தேங்கிய ஆழியின் ஆழம் பெரியது
ஓங்கியக் கோட்டை விட.
141
கோடு - மலை
வேடுதற் செய்யாப் புலிக்குடத்தி ஓடுமாம்
வேடிய எச்சம் எடுத்து.
142
புலிக்குடத்தி - கழுதைப்புலி, hyena
வேடுதல் - வேட்டை (Hunting)
தேர்வின் முதல்நாள் படித்து மனனஞ்செய்
வார்மறப் பாரடுத்த நாள்.
143
மனனம் - மனப்பாடம், memorization
கூட்டத்தில் அம்மாவென் றேயழுங்கு ழந்தையாய்
வாட்டத்தில் வாடும் மனம்.
144
புலிங்கம் எரிக்குமே பூம்பொழிற் காடு
பழித்தல் எரிக்குமே நட்பு.
145
புலிங்கம் - தீப்பொறி (Spark)
கண்ணோடு காட்சியாய் கண்டேனே கண்மணியே
விண்ணோடு வீழ்ந்தேன் வியந்து.
146
கதிர் மறைப்பு (Solar Eclipse)
கதிரோன் மறைத்துடன் காரிருள் ஆகும்
மதியோன் நடுவே வர.
147
பொகுட்டெனப் பொய்த்திடுவர் மெய்வீழப் பொய்யே
பொருட்டெனப் பேசி வரின்.
148
பொகுட்டு - நீர்க்குமிழி
நன்னெறி எம்கொள்கை யென்பாரெ திர்க்கருத்தாய்
வன்சொல்லை வீசும் புலை.
149
புலை - இழிவானவன், அற்பன்.
என்னிழல் தன்னோடு என்னிழல் ஆகிய
என்னவள் தன்னிழலு மிங்கு.
150
ஹால் விளைவு (2 குறள்கள்)
மின்னோ டிடுங்கடத்தி காந்தவெளி யிற்வைக்க
மின்னழுத்தம் உண்டாகி டும்.
151
மின்னோட்டம் காந்தவெளியின் திசைக்கு உண்டான
மின்னழுத்தம் செங்குத்தா கும்.
152
நற்காலம் நன்னேரம் மட்டு மிலாதிங்கு
நிற்கும் துயரிலும் நட்பு.
153
மாற்றமென மூடரை ஆளப் பணித்திடில்
சீற்றத்திற் பீழைகொள் நாடு.
154
பீழை - துன்பம்
ஆறுவாய்க் கால்கண்மாய் ஊருணி ஏரியென்று
தேர்ந்தப் புழலிருந்த நாடு.
155
புழல் - வடிகால்
காட்சியெழில் காண்பவர் கண்ணில் கவிதையும்
வாசிப்போர் உள்ளம் பொறுத்து.
156
கலைமுகத்தே காற்றில் கலைந்திட்டக் கூந்தல்
கலையோவி யந்தீட் டுதே.
157
புளகமென நீயிருக்க என்னையுனில் கண்டேன்
புளகித்தின் புற்றதுள் ளம்.
158
புளகம் - கண்ணாடி, மெய்சிலிர்ப்பு
அச்சம் அடக்கம்பெண் மைக்கணி யென்பவரைத்
துச்சம் எனத்தூற் றிடு.
159
சீபெக் விளைவு
வெப்பயிணை ஈருலோகச் சந்திகள் வேறுபட்ட
வெப்பத்தில் வைக்கமின்னோ டும்.
160
சிறுமுயல் கொன்றோன்பின் நின்றப் புலிக்குப்
புளிந்தனு மானா னிரை.
161
புனல்சூழ் புளின முருவான வூரில்
மணற்காடா யாறுக ளின்று.
162
புளினம் - ஆற்றின் இடையில் நீர்சூழ உருவாகும் தீவு... ஆற்றிடைத்தீவு...
அம்பினால்கொல் வோன்மட்டு மல்லன் புளிஞனோ
நம்பவைத்துக் கொல்லு பவன்.
163
புளிஞன் - வேடன்
மாற்றமும் தேற்றமும் கொண்டேற்றம் காணாதோர்
தோற்றே விழுவா ரொழிந்து.
164
சார்லஸ் விதி:
மாறா அழுத்தந் தனில்வளிமக் கொண்மைநேர்
சார்பாகும் வெப்ப நிலைக்கு.
165
கே-லுசாக் விதி:
மாறிலிக் கொண்மை வளிம அழுத்தம்நேர்
சார்பாகும் வெப்ப நிலைக்கு.
166
அவகேட்ரோ விதி:
வெப்பநிலை கொண்மை அழுத்தமொன்றெ னில்வளிம
மூலக்கூ றெண்ணிக்கை யொன்று.
167
புளுகர் புகல்வது பொய்மட்டு மன்று
புளுகுடன் மெய்யுங் கலந்து.
168
புறக்காழ் வலியதாம்புல் லிற்கு மரத்து
அகக்காழ் வலிதெனுந் தொல்.
169
அறைக்கே வொளிதரும் தன்னிழல் நீக்கும்
முறைய றியாத விளக்கு.
170
பைதாகரஸ் தேற்றம்:
செம்பக் கவிருமடிச் செம்முக்கோ ணத்துமற்ற
பக்கத் திருமடியின் கூட்டு.
171
புறம்பேசி மெல்லப் புறத்தே நுழைவார்
புறக்கிட்டே யோடிடுவார் காண்.
172