பொதும்பழித்து வீடுகள் கட்டிப் பழிப்பார்
பொதும்புறை யானை புகின்.
86
பொதும்பழித்து வீடுகள் கட்டிப் பழிப்பார்
பொதும்புறை யானை புகின்.
86
விண்மீன் பொதுளியி ருக்குமிருள் வானிலவள்
நின்றே பொதுண்ட மதி.
87
பொதுள் - அடர்ந்த, நிறைந்த
அரசுபொய்த்த தோநல் மழைபொய்த்த தோமணல்
அள்ளி வரிப்பரிபோல் ஆறு.
88
இருசிற குத்திறந் தேமிதந் தூர்ந்து
பெருவா னளந்திடும் வீ.
89
வீ - பறவை
உடல்பொய்த குண்டு உயிர்பறித்தும் சுட்டக்
கொடியோன் தியாகியென் பார்.
90
பொய்தல் - துளைத்தல்
போர்கொள் களத்தினில் வேளோண் அடித்திடச்
சேர்ந்தேக் குவிப்பொங் கழி.
91
பொங்கழி - தூற்றாத நெல் குவியல்...
இறந்தும் உயிர்துறந்தும் சிரித்திடும் - யார்க்கு
கிடைத்திடு மிச்சிறப்பு வாய்ப்பு?
92
😀😀
பசுமை கடந்தப் பொரியரைய றுப்பின்
பசுமை தருவும்வீ ழும்.
93
உழவுநிலந் தன்னை விலையிட்டு விற்றிடில்
வீழ்ந்திடும் நன்னாடும் சேர்ந்து.
94.
பொரியரை - காய்ந்த மரத்தின் தண்டுப்பகுதி...
சொன்னப் பொருண்மொழி தன்பொருள் நீங்குமே
சொல்லியோர் போற்றா விடில்.
95
சோலைமலை ஊடுவிரித் தொட்டிலோ புல்விரிந்த
கோலவெழில் பைம்பொழில் நாடு.
96
பைம்பொழில் சூழப் பொழிலாட்சி பின்னாளில்
பொள்ளாச்சி யென்றே திரிபு.
97
இருவுளஞ் சேர்ந்தின்பம் வாழ்வில் மகிழ்வுஞ்
தருங்கா தலைப்போற் றுதும்.
98
பாறை தனைப்பொளித்து கற்சிலை யாக்கிடி
மாதலால் காதல்செய் வீர்.
99
வெண்முகில் ஈர்த்து தலைதனில் சூடிடும்
செங்கோட் டிற்கது பொற்பு.
100 💪
பொற்பு - ஒப்பனை
வருஞ்சேதி உண்மை யெனநம் பிடுவார்
பொறியிலி ஆய்ந்தாரா யாது.
101
பொறியிலி - அறிவற்றோர்
பெட்பிலா வாழ்வு தெளிநீர் வறண்டநல்
லாற்றின்கண் நின்றிடுமோ டம்.
102
பெட்பு - அன்பு, காதல்
பிறர்நலம் நோக்கிச் செயல்கள் பலபுரிவார்
தன்னலன்னோக் காப்பெருந்த கை.
103
தலைகீழ் உருவென குட்டையான ஏரியில்
ஓங்கிநின்ற பல்லடுக்கு வீடு.
104
சிறுநிழலி ருட்டல்ல நம்பி வெளிச்ச
வெளிநோக் கிடுஞ்சிறுத ளிர்.
105
சின்னஞ் சிறுமழலை யூட்டிடும் அன்னக்கூழ்
பென்னம் பெரிய பரிசு.
106
பூசலும் ஏசலும் செய்திடுவாள் பேரன்பு
பூசிய உள்ளமுடை யாள்.
107
சினங்கொண் டவள்முகத்துப் புன்னகை பாலை
நிலத்துப் புதுப்பெயல் போன்று.
108
புதுப்பெயல் - முதல் மழை
மதத்தின் புரணி பளபளக்கும் உள்ளூறும்
சூழ்ச்சி புரளி பல.
109
புரணி - புறத்தோல்
காலம் புரள உடனோடும் நம்வாழ்வு
ஞால அறிவு பெறின்.
110
குருடாய்ப் புரளிப் பகிர்வார் முயலார்
தரவுகள் கொண்ட றிய.
111
மனத்துப் புரிசை இடித்திட வீழும்
சினத்துப் புரிசை பல.
112
புரிசை - மதிற்சுவர்
ஏர்பிடித்தோர் தற்கொலை செய்யும் ஊரினில்
தேர்பிடித்தே ஊர்வல மோ?
113
புருவஞ் சுருங்கும் பருவம் எனினும்
புருவை மனத்திலன் றோ?
114
புருவை - இளமை
புரைசை வலிதென் றெண்ணுமாம் தன்முழு
நிறையறி யாதக் களிறு.
115
புரைசை - யானைக் கட்டும் கயிறு...
கசந்தாலும் உண்மை நனிதே இனித்தே
கவலையீனும் பொய்யை விட.
116
எண்ண அலையொத்தோர் புல்லிய நட்பு
என்றும் நிலைத்திடு மே.
117
புல்லிய - பொருந்திய, நெருங்கிய
தரவுதா வென்றே வினவநம் பாமை
தவறெனச் சொல்லும் மதம்.
118
மல்லனோ புல்லனோ கள்ளனோ ஆராய்ந்து
நல்லனைத் தேர்தல் நலம்.
119
தீந்தேன் தடவிய அம்புமுயிர் கொன்றிடும்
தீயவர் இன்சொல்லும் தீது.
120
வீரம்போ ரிடல்மட்டு மன்று உயிர்க்குருதி
யீதலும் பெருவீர மாம்.
121
நல்லாரைப் போற்றும் உலகமோ நல்லாரின்
புல்லாரைத் தூற்றுஞ் சூழ்ந்து.
122
புல்லார் - எதிரி
புல்லார் ஒருவரும் வேண்டிலை அன்பு
இல்லார் அழிந்தொ ழிய.
123
பெர்னௌலி தேற்றம்
சீரென ஓடிடும் பாய்மத்தெப் புள்ளியின்
ஆற்றலின் கூட்டலொன் றே.
124
மாசாக்கும் நீர்நிலம் காற்றை நிறுவனம்
காசாக்கும் கேளா தரசு.
125
பூவிதழ் காணும் தேனீக்கள் அதைத்தாங்கும்
புல்லிதழ் காண்பதில் லை.
126
புல்லிதழ் - பூவின் இதழ்களைத் தழுவித் தாங்கி நிற்கும் காம்பின் இதழ் வட்டம், Sepal, Calyx
தூய்மை யெனக்கூ வுவார்துப் புரவுப்
பணியா ளரைமதி யார்.
127
மலரோ ஒருநாள் உதிர்ந்திடும் புல்லிதழ்
உதிராது தாங்கும் கனி.
128
வில்விழி யாலவள் வீசும் கணைகளோ
புல்லுதே யுள்ளப்பூ வை.
129
புலரும் பொழுதிங்கு நற்பொழுதே புத்தம்
புதிதா யுணர்வாய் மனத்து.
130
உண்மை நவின்றிட போமெதற்கு உள்ளத்து
திண்மை வளர்த்திட போம்.
131
போம் - அச்சம், போகும், போய் விடும்...
அறிவாள னென்பார் தரவுகேட் பின்புல்
லறிவாள னாய்க்குரைப் பார்.
132
புல்லறிவாளன் - கீழ்த்தரமான அறிவுடையவன், அறிவிலி
விழுமுக மூடிகள் கற்றுத் தருமே
விழுமியப் பாடம் பல.
133
மிடுக்குத் தமிழ்ச்சொல் லிருக்க ஒட்டிக்
கெடுக்கும் வடமொழியெ தற்கு?
134
கதிரின் ஒளியில் புலர்த்திய மத்திக்
கருவாடு என்றும் அமிழ்து.
135
கெப்ளரின் முதல் கோளியக்க விதி:
கோள்சுற்றுப் பாதைநீள் வட்டம் அதன்குவி
யங்களி லொன்றுக் கதிர்.
136
கெப்ளரின் இரண்டாம் கோளியக்க விதி:
சமநேரத் தேகோள் கதிரிணைக்குங் கோடு
விரவும் பரப்பு சமம்.
137
கெப்ளரின் மூன்றாம் கோளியக்க விதி:
சுற்றுக்கா லத்தின் இருபடிநேர் சார்பாம்
அரைப்பேரச் சின்முப் படிக்கு.
138
உளத்தே நகைத்துப் புறத்தேச் சினக்கும்
புலவி உறவின் நகை.
139
மெல்லென் றுதிக்கும் கதிரோன் வரும்வரை
புல்லில் உறங்கும் பனி.
140
தேங்கிய ஆழியின் ஆழம் பெரியது
ஓங்கியக் கோட்டை விட.
141
கோடு - மலை
வேடுதற் செய்யாப் புலிக்குடத்தி ஓடுமாம்
வேடிய எச்சம் எடுத்து.
142
புலிக்குடத்தி - கழுதைப்புலி, hyena
வேடுதல் - வேட்டை (Hunting)
தேர்வின் முதல்நாள் படித்து மனனஞ்செய்
வார்மறப் பாரடுத்த நாள்.
143
மனனம் - மனப்பாடம், memorization
கூட்டத்தில் அம்மாவென் றேயழுங்கு ழந்தையாய்
வாட்டத்தில் வாடும் மனம்.
144
புலிங்கம் எரிக்குமே பூம்பொழிற் காடு
பழித்தல் எரிக்குமே நட்பு.
145
புலிங்கம் - தீப்பொறி (Spark)
கண்ணோடு காட்சியாய் கண்டேனே கண்மணியே
விண்ணோடு வீழ்ந்தேன் வியந்து.
146
கதிர் மறைப்பு (Solar Eclipse)
கதிரோன் மறைத்துடன் காரிருள் ஆகும்
மதியோன் நடுவே வர.
147