வயல்தன்னில் நற்பயிர் செய்து நிதம்நம்
உயிர்காக்கும் நல்லுழ வன்.

49

கண்ணாட்டி உன்னிரு கண்கள் எனைநானே
கண்டிடும் கண்ணா டியோ.

50

குற்றம் புரிந்தவர் குற்றவாளி சுற்றமில்லை
என்னுங்கௌ சல்யாசங் கர்.

51

பிம்பங்கொண் டாயிரம் காதைகள் செய்திட்டீர்
பிம்பம்வீ ழவீழும் புகழ்.

52

உப்பிட்ட மாவைக் குழித்தட்டில் இட்டவித்து
தட்டினில் இட்டயிட் லி.

53

புதுமை யெனவே புதிதாய் மலரும்
கதிரின் விடிநற்கா லை. 54

நதியின் தடமது ஒன்றே இருப்பினும்
ஓடிடும்நீ ரோபுதி தே. 55

நாடகமாய் ஓடிடும் வாழ்வினில் ஒவ்வொரு
காட்சிகா ணப்புதி தே. 56

கருவில் மிதந்து நெடுந் துகில்கலைய
ஓவென அழல்புது மை. 57

புதுமை யெனலென் றும்புதுமை யல்லமனம்
ஏற்றபழ மையும்புது மை. 58

காவியின் காவியம் காற்றில் பறந்திட
போட்டியில் வென்றநோட் டா.

59

தனிமை தருமமைதி ஆழி நிலத்து
நெருங்க அலையுங் கடல்.

60

நியூட்டன் முதல் விதி (குறள் வடிவில்)

நிற்ப தியங்கிலை ஊர்வது நிற்றலிலை
ஓர்விசைசெ யல்படாவி டில்.

61

நியூட்டன் இரண்டாம் விதி (குறள் வடிவில்)

இயங்கு பொருளதன் விசையோ நிறையும்
முடுக்கத்து நேர்தக வாம்.

62

நியூட்டன் மூன்றாம் விதி (குறள் வடிவில்)

ஓர்வினைக் கோர்சம மானவெதி ரான
வினையுண்டு என்ப தியைபு.

63

ஆற்றல் அழிவின்மை விதி:

வடிவங்கள் ஒன்றது மற்றதாய் மாறிடும்
ஆக்கம் அழிவிலாதாற் றல்.

64

ஆர்க்கிமிடீஸ் மிதத்தல் விதி

வெளியேறு நீரின் எடையோ சமமாம்
மிதவைத் தருவிசைக் கே.

65

பாஸ்கல் விதி:

அடைத்துள்ள நீர்மத்தே ஈயுமழுத் தம்பரவும்
எத்திசையுஞ் சீரென வே.

66

பாயில் விதி:

அழுத்தமும் கொள்ள ளவுமெதி ராம்வளி
வெப்பநிலை மாறா விடில்.

67

ஓம் விதி:

மின்கடத்தி பாய்ந்திடு மின்னோட்டம் நேர்தகவாம்
மின்கடத்தி மின்னழுத்தத் திற்கு.

68

கிர்ச்சாஃப் மின்னோட்ட விதி

சந்தியில் பாய்ந்திடு மின்னோட்டம் தம்மின்
குறியியல் கூட்டல் சுழி.

69

கிர்ச்சாஃப் மின்னழுத்த விதி

மூடியமின் சுற்றினில் மின்னழுத் தங்கள்
குறியியல் கூட்டல் சுழி.

70

கிர்ச்சாஃப் நிறமாலை விதி 1:

அடர்வளி நீர்மதிடம் தூண்டிட ஈனும்
தொடரலைக் கற்றைத் தனை.

71

கிர்ச்சாஃப் நிறமாலை விதி 2:

மெல்வளி தன்னை அருட்டிட ஈனும்
கதிரலைக் கற்றைத் தனை.

72

கிர்ச்சாஃப் நிறமாலை விதி 3:

மெல்வளி தன்னில் தொடரலை பாய்ச்ச
கிடைப்பது உட்கவர் கற்றை.

73

வாழ்வினில் ஏமாந்தோர் விட்டிடும் பெருமூச்சு
வீழ்த்தும் புயலெனச் சூழ்ந்து.

74

கோடையில் வெண்பனியோ என்றே நினைத்தேன்
காய்ந்துடை பொங்கர்தன் காய்.

75

பொங்கர் - இலவம்

மாசுப் புகையெழத் தீயிடல்நன் றோமனத்து
மாசுநீங்கத் தீயிடற்போ கி.

76

விதைநெல் லெடுத்தியற் கைக்குப் புதுநெல்
படைத்திடும்பொங் கற்திரு நாள்.

77

விண்ணது ஆழியாய் கொண்டலோத் தீவென
நீந்திக் களிக்குங்கா கம்.

78

பிடித்தோர் விரல்பற்றித் துள்ள மகிழ்ந்து
நடந்த மழலைக்கா லம்.

79

உணர்ச்சிப் பெருக்கெடுக்க பேசிடுவார் நம்முள்
ளுணர்வு குருடாக்கி யே.

80

மெய்யெனப் பொய்யினை வீசிடு வார்நாம்
மெய்யறியோ மென்றெண்ணி யே.

81

மூங்கில்தண் டில்துளை யிட்டுத்தீ தன்னிலே
வாட்டிய தேனிசைக்கு ழல்.

82

கானா இசை:

பட்டவலி சொல்லும் உறவென ஊர்கூடிவாழ்
இன்பமுஞ் சொல்லும் இசை.

83

வாழ்த்துக்குறள்

புகழொடு பேரும் நனிதினிவாழ் வுஞ்சேர்
மகிழ்திகழ் வாழ்த்துனக் கே!

84

கொண்டலில் சேர்ந்தனீ ராவி குளிர்காற்று
கொள்ளப் பொழியும் மழை.

85

பொதும்பழித்து வீடுகள் கட்டிப் பழிப்பார்
பொதும்புறை யானை புகின்.

86

விண்மீன் பொதுளியி ருக்குமிருள் வானிலவள்
நின்றே பொதுண்ட மதி.

87

பொதுள் - அடர்ந்த, நிறைந்த

அரசுபொய்த்த தோநல் மழைபொய்த்த தோமணல்
அள்ளி வரிப்பரிபோல் ஆறு.

88

இருசிற குத்திறந் தேமிதந் தூர்ந்து
பெருவா னளந்திடும் வீ.

89

வீ - பறவை

உடல்பொய்த குண்டு உயிர்பறித்தும் சுட்டக்
கொடியோன் தியாகியென் பார்.

90

பொய்தல் - துளைத்தல்

போர்கொள் களத்தினில் வேளோண் அடித்திடச்
சேர்ந்தேக் குவிப்பொங் கழி.

91

பொங்கழி - தூற்றாத நெல் குவியல்...

இறந்தும் உயிர்துறந்தும் சிரித்திடும் - யார்க்கு
கிடைத்திடு மிச்சிறப்பு வாய்ப்பு?

92

😀😀

பசுமை கடந்தப் பொரியரைய றுப்பின்
பசுமை தருவும்வீ ழும்.

93

உழவுநிலந் தன்னை விலையிட்டு விற்றிடில்
வீழ்ந்திடும் நன்னாடும் சேர்ந்து.

94.

பொரியரை - காய்ந்த மரத்தின் தண்டுப்பகுதி...

சொன்னப் பொருண்மொழி தன்பொருள் நீங்குமே
சொல்லியோர் போற்றா விடில்.

95

சோலைமலை ஊடுவிரித் தொட்டிலோ புல்விரிந்த
கோலவெழில் பைம்பொழில் நாடு.

96

பைம்பொழில் சூழப் பொழிலாட்சி பின்னாளில்
பொள்ளாச்சி யென்றே திரிபு.

97

இருவுளஞ் சேர்ந்தின்பம் வாழ்வில் மகிழ்வுஞ்
தருங்கா தலைப்போற் றுதும்.

98

பாறை தனைப்பொளித்து கற்சிலை யாக்கிடி
மாதலால் காதல்செய் வீர்.

99

வெண்முகில் ஈர்த்து தலைதனில் சூடிடும்
செங்கோட் டிற்கது பொற்பு.

100 💪

பொற்பு - ஒப்பனை

வருஞ்சேதி உண்மை யெனநம் பிடுவார்
பொறியிலி ஆய்ந்தாரா யாது.

101

பொறியிலி - அறிவற்றோர்

பெட்பிலா வாழ்வு தெளிநீர் வறண்டநல்
லாற்றின்கண் நின்றிடுமோ டம்.

102

பெட்பு - அன்பு, காதல்

பிறர்நலம் நோக்கிச் செயல்கள் பலபுரிவார்
தன்னலன்னோக் காப்பெருந்த கை.

103

தலைகீழ் உருவென குட்டையான ஏரியில்
ஓங்கிநின்ற பல்லடுக்கு வீடு.

104

சிறுநிழலி ருட்டல்ல நம்பி வெளிச்ச
வெளிநோக் கிடுஞ்சிறுத ளிர்.

105

சின்னஞ் சிறுமழலை யூட்டிடும் அன்னக்கூழ்
பென்னம் பெரிய பரிசு.

106

பூசலும் ஏசலும் செய்திடுவாள் பேரன்பு
பூசிய உள்ளமுடை யாள்.

107

சினங்கொண் டவள்முகத்துப் புன்னகை பாலை
நிலத்துப் புதுப்பெயல் போன்று.

108

புதுப்பெயல் - முதல் மழை

மதத்தின் புரணி பளபளக்கும் உள்ளூறும்
சூழ்ச்சி புரளி பல.

109

புரணி - புறத்தோல்

காலம் புரள உடனோடும் நம்வாழ்வு
ஞால அறிவு பெறின்.

110

குருடாய்ப் புரளிப் பகிர்வார் முயலார்
தரவுகள் கொண்ட றிய.

111

மனத்துப் புரிசை இடித்திட வீழும்
சினத்துப் புரிசை பல.

112

புரிசை - மதிற்சுவர்

ஏர்பிடித்தோர் தற்கொலை செய்யும் ஊரினில்
தேர்பிடித்தே ஊர்வல மோ?

113