கவிஞர் வெண்கொற்றன் 🖋️

3 Followers
3 Following
14 Posts
கவிஞன். இயற்பியலாளன். தமிழன். ஆசிரியன். வரலாற்று ஆர்வலன். மொழியியல் மாணவன்.
My Quora Profile:https://qr.ae/TWpfXf

காலை பூசையில்தான் கவனித்தேன்
சாமிப் படத்திற்குப் பின்னிருந்த
அந்தக் கரப்பானை,

சட்டெனப் பிடித்தெறிய
நீண்ட கையைச்
சடக்கென்று நிறுத்தியது
மூளைக்குள் ஒரு கேள்வி:

ஒருவேளை இது
கடவுளாய் இருந்தால்?

"மெச்சினேன் உன் பக்தியை"
எனும் முன்
நசுக்கிவிடக் கூடாதே!

நசுக்கவா? நமஸ்கரிக்கவா?
என நான்
மனத்திற்குள் பட்டிமன்றம்
நடத்திக்கொண்டிக்கும்போதே
அதன்மீது
மருந்தடித்துவிட்டாள் என்
மனைவி!

©2019, Vennkotran.

இனிய காலை வணக்கம் 😀😀🙏🙏

விலகாத கனவைப்போல் இரவின் மிச்சம்
கலந்திருக்கும் அதிகாலை வானில் நீலம்
இளஞ்சிவப்போ டியைந்திங்கோர் இனிய காட்சி
அளிக்கிறதே, அழகியகார்த் திகைநற் காலை...

இரவுகளோர் தாய்மடிபோல் இனித ணைக்கும்,
வரும்விடியல் தந்தையென மனத்தில் ஊக்கம்
பெருகிடவே 'எழுந்துழைப்பாய்' என்றி யம்பும்,
கருத்திலிதைக் கொண்டெழுக, காலை வணக்கம்!

#கலிவிருத்தம்

©2019, Vennkotran.

மண்ணில் உயிரெல்லாம் வானில் சுடரொளியாம்
உன்னைச் சார்ந்தனவே, உறக்கம் உனக்கழகோ?
கண்ணில் நிறையொளியே, கருத்தைத் தூண்டிடுமுன்
பொன்னங் கதிர்பரப்பிப் பொழுதை மலர்விப்பாய்...

#கலிவிருத்தங்கள்

இனிய காலை வணக்கம் நண்பர்களே...

©2019, Vennkotran.

இன்னும் உறக்கமென்ன? எழுக கதிரோனே!
சின்னஞ் சிறுபறவை தெருநாய் கூட்டங்களும்
முன்னம் எழுந்திங்கே மூழ்கின தம்பணியில்,
பொன்னங் கதிர்பரப்பிப் பொழுதை மலர்விப்பாய்...

உன்றன் ஒருதேரின் ஒருசா ரதியருணன்
முன்னஞ் சிவந்தெழுக, முரணில் சந்தங்களால்
இன்னே பெயர்பெற்ற ஏழு புரவிகளாம்
பொன்னங் கதிர்பரப்பிப் பொழுதை மலர்விப்பாய்...

#கலிவிருத்தங்கள்

©2019, Vennkotran.

சாலையிலே சிவப்புநிற விளக்கைக் கண்டால்
'சற்றேநில்' எனப்பொருளாம் - கிழக்கின் வானில்
காலையிலே மிளிர்சிவப்பின் கருத்தோ வேறு
'கனவுகளை நிசமாக்கும் களமாம் ஓர்நாள்
கோலமுடன் மலர்ந்ததுகாண், குதித்தெ ழுந்தே
கொண்டாடி முன்செல்க' என்று ரைக்கும்...
ஞாலத்தின் சுழற்சியினால் நன்றாய் மற்றோர்
நாளிங்குப் பூத்ததுவே, நன்றே கொள்க!

#எண்சீர்_விருத்தம்

இனிய காலை வணக்கம்...

©2019, Vennkotran.

எறும்பு மருந்து வாங்க கடைவீதிக்குச் சென்றேன் மகளுடன்.

"ஏம்பா, நம்ம வீட்டு எறும்புகளுக்கு உடம்பு சரியில்லையா?" என்று அப்பாவியாகக் கேட்டாள்.

மருந்து வாங்காமல் திரும்பி விட்டோம்!

உலகம் குழந்தைகளுக்கானதாகவே இருந்திருக்கலாம்.
✍🙏🌹

#படித்தவற்றில்_பிடித்தது

அதிகாலைச் செவ்வானின் பொட்டலத்தின் உள்ளே
புதுநாள் அழகுப் பரிசு!

#குறள்வெண்பா

The beautiful gift of a new day comes wrapped in dawn's crimson sky!

இனிய காலை வணக்கம் நண்பர்களே...

©2019, Vennkotran.

கருமேகம் மறைப்பதனால் கதிரோன் வானில்
சுருண்டொதுங்கி நின்றிடுமா? காலைப் போழ்து
விரியாமல் போய்விடுமா? விடியும் நன்றே!
சொரிகின்ற மழைநன்றாய்ச் சொல்லும் வாழ்த்தே!

அதிகாலை மென்னிருளும் அளவாய்க் காற்றில்
பொதிந்துள்ள இன்குளிரும் பொழியும் தூறல்
விதிக்கின்ற இன்பமொடு விடியல் நன்றாய்
புதுநாளைப் பரிசளித்துப் புகலும் வாழ்த்தே!

இனிய காலை வணக்கம் தோழமைகளே...

#கலிவிருத்தம்

©2019, Vennkotran.

@stux hi, so I have two accounts now (one in mastodon another in mstdn) how do I link / club them together? Is that possible? (So I can post to/ read from both instances in a single go?) Please clarify... TIA

(Also, doesn't mastodon have direct message option?)