உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை

யாரும் எதுவும் கற்றுக் கொள்வதில்லை.

டிரம்ப் உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்று பத்தாண்டுகளோ அதற்கு மேலோ ஆகிறது என்று நினைக்கிறேன். அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறும் வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தன. ஒரு குத்துச்சண்டை வீரனைப் போல் ஒவ்வொருவராக போட்டுத் தள்ளி கடைசியில் தவிர்க்க முடியாத தேர்வாக தனித்து நின்றார். அது ஒரு குத்துச்சண்டை என்று உணராத மற்றவர்கள் நல்லாட்சி பற்றி விவாதம் செய்து கொண்டிருந்ததுதான் அவரை வெற்றி பெறச் செய்தது.

அப்போது அவரை எதிர்த்து நின்றவர்கள் சற்றே புத்திசாலித்தனமாக செயல்பட்டிருந்தால் அவர் தோற்றிருப்பார். ஆனால் அந்த சமயத்தில் தம் அனைவரின் இழப்பின் விலை தனி இழப்பின் விலையைவிட கூடுதலாக இருக்கும் என்று தெரியவில்லை. டிரம்ப் அவனை அடித்தால் நாம் மிஞ்சி நிற்போம், அப்போது நமக்கு ஆதரவு திரளும் என்பது ஒரு கணக்கு. இதில் ஒரு பிழை, எல்லாம் எப்போதும் போல் நார்மலாகப் போய்க் கொண்டிருக்க வேண்டும் என்ற விழைவு. யாரும் அசாதாரணமான எதையும் செய்யத் தயாராக இல்லை. கத்திச் சண்டைக்கு ஒருவன் துப்பாக்கி கொண்டு வந்திருப்பதை உணராத அறிவீனம்.

இதை அப்போதே நிறைய பேர் பேசி முடித்து புரிந்து கொண்டார்கள். என்ன செய்தால் டிரம்ப்பை தோற்கடித்திருக்க முடியும் என்பது தெளிவு. இந்த படிப்பினை பின்னொரு நாள் சாண்டர்ஸ்சைத் தோற்கடித்து பைடன் வெற்றி பேறு உதவியது. சாண்டர்ஸ்சுக்கு எதிரானவர்கள் சீக்கிரமே பைடன் பின் நின்று அது வரை பின்தங்கியிருந்தவர் வெற்றி பெற உதவினார்கள்.

எதற்கு இந்த பழங்கதை? இதே விவகாரம் உலக அளவிலும் நடக்கிறது. ட்ரம்ப் சகட்டுமேனிக்கு தாக்குகிறார். பலவீனமான இடங்களில் வெற்றி பெறுகிறார், உறுதியான இடங்களில் பின்வாங்குகிறார். ஆனால் தாக்குதலை நிறுத்துவதில்லை. சமரசம் செய்து கொண்டால் இன்னொரு நாள் வேறொரு பிரச்சினை கொண்டு வருகிறார்.

அந்த காலத்து சக்ரவர்த்திகள் போல், ஒரு அலெக்சாண்டர் அல்லது சீஸர் போல், உலகையே தன் வரைக்குள் கொண்டு வரப் பார்க்கிறார்.  தென்னமேரிக்க, வட அமேரிக்க கண்டங்கள் தனது. ஐரோப்பா தன் ஆளுகையில். மத்திய கிழக்கு தனக்கு கப்பம் செலுத்துவதை உறுதி செய்ய அடியாள் இஸ்ரேல். ருஷ்யாவும் சீனாவும் கசிச், க்ரூஸ் இடத்தில். ஆனால் அவர்கள் நாளும் வரும்.

வெள்ளம் தலைக்கு மேல் போகும்போது கூரை மீது ஏறுகிறோமே தவிர இடுப்புக்கு வரும்போதே தலை கூரை என்று உயர்ந்தால் என்ன ஆகும் என்று இடத்தை காலி செய்வதில்லை. இதை நார்மல்சி பயாஸ் என்று சொல்லலாம். இன்று இரானிலும் க்யூபாவிலும் ஜெயிக்கும் ட்ரம்ப் நாளை க்ரீன்லாந்துக்கும் டியாகோ கார்சியோவுக்கும் வரலாம். பின்னர் இலங்கை துறைமுகம், வங்கதேசத் தீவு என்று விரியலாம்.

இதெல்லாம் அசாத்தியம், பீதியைக் கிளம்புவது என்பது நார்மலான காலத்தில் உண்மை. ஆனால் ட்ரம்ப் விஷயத்தில் பீதியைக் கிளப்பியவர்களே இதுவரை சரியாக இருந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அசாதாரண காலங்களில் அசாதாரண முடிவெடுக்கத் தவறுபவர்கள் ஆற்றலற்றுப் போவது தவிர்க்க முடியாதது. ரூபியோ க்ரூஸ் போல் வால் பிடிக்க வேண்டும் அல்லது கசிச் போல் காணாமல் போக வேண்டும்.

#empire