சாமானிய மக்களின் பாலிசிகள் நிராகரிக்கப்படும் அபாயம்

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையத்தின் ‘பீமா சுகம் பரிவர்த்தனை’ முன்மொழிவை ரத்து செய்திட மக்களவையில் பி.ஆர்.நடராஜன்.எம்.பி., வலியுறுத்தல் #Insurance #IRTA

இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ), ‘பீமா சுகம் பரிவர்த்தனை’ என்னும் முன் மொழிவினைத் தாக்கல் செய்திருக்கிறது. இந்தத் திட்டமானது இன்சூரன்ஸ் துறையில் இப் போது செயல்பட்டு வரும் இன்சூரன்ஸ் ஊழியர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகளின் நலன்களுக்கு எதிரான ஒரு திட்டமாகும்.
இன்சூரன்ஸ் துறையானது தற்போது நாட்டில் நாற்பது லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் சொத்துக்களைப் பெற்றிருக்கிறது. இது இன்சூரன்ஸ் ஊழியர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகள் முதலியோரின் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையாக பெறப்பட்டதாகும்.
மத்தியப் பொதுத்துறை நிறுவனங்களில் இன்சூரன்ஸ் துறை மிகவும் வளமான ஒன்றாக தற்போது திகழ்ந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.
நாட்டில் கிராமப்புற மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து வருகிறது. ஒன்றிய அரசாங்கத்திற்கும், பல மாநில அரசாங்கங்களுக்கும் கடன்களும் கொடுத்து உதவி வருகிறது.
இதன் பங்குகள் அனைத்தும் அநேகமாக ஒன்றிய அரசாங்கத்திடமும், மாநில அரசாங்கங்களிடமும்தான் இருந்து வருகின்றனவே தவிர தனியார் எவரிடமும் கிடையாது.
இப்போது ஐஆர்டிஏ கொண்டுவந்துள்ள ‘பீமா சுகம் பரிவர்த்தனை’ ஏற்கப்பட்டால் அதனால் சாமானிய மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது. தற்சமயம் எல்ஐசி-இன் கீழ் சுமார் 200 விதமான பாலிசிகள் நடப்பில் இருந்து வருகின்றன.
இனி வருங்காலங்களில் ஐஆர்டிஏ கொண்டுவரும் முன்மொழிவின்படி இணையம் மூலமாகத்தான் பாலிசி எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
சாமானிய மக்கள் தாக்கல் செய்திடும் பாலிசிகள் நிராகரிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாகிவிடும். அதேபோன்று பாலிசிதாரர்கள் தங் கள் பாலிசிகள் முதிர்வு பெறுவதை அறிவதற்கான வாய்ப்பையும் இழந்துவிடுகிறார்கள்.
பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாத்திட, அவர்கள் தங்கள் பாலிசி முதிர்வு பின், தொகையினை அவர்கள் முழுமையாகப் பெற்றிட உதவிடும் விதத்தில், ஐஆர்டிஏ உத்தேசித்துள்ள பீமா சுகம் பரிவர்த்தனைத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று இந்த அவையின் மூலமாக ஒன்றிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன
அதன் மூலம் நாட்டின் பொதுச்சொத்தான 40 லட்சம் கோடி ரூபாயைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், இதனுடன் இணைந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கும் 24 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள், முகவர்கள், வளர்ச்சி அதிகாரிகளின் நலன் களையும் பாதுகாத்திட முன்வர வேண்டும் - தோழர் பி.ஆர்.நடராஜன்.எம்.பி